தொழில்நுட்ப உலகம் விண்னைத் தாண்டி வளர்ந்து வருவதை ஒவ்வொரு நாளும் நாம் சாட்சியாக காண்கிறோம். நேற்று வரை பிரபலமாக இருந்த தொழில்நுட்பங்களை பின்வாங்க வைக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் நீண்ட காலமாக கோடிக்கணக்கான பயனாளர்களால் நம்பிக்கையுடன் பயன்படுத்தப்பட்டு வந்த ‘ஸ்கைப்’ தளமும் அதன் பயணத்தின் முடிவை எட்டியுள்ளது.
2003-ம் ஆண்டு எஸ்டோனியாவைச் சேர்ந்த நால்வர் உருவாக்கிய ஸ்கைப், உலகளாவிய அளவில் வீடியோ கால் சேவையில் முன்னணியில் இருந்தது. பல்லாயிரக்கணக்கான மைல்கல்லுகளை கடந்த இந்த சேவை. 2011-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்தது. அப்போது சுமார் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஸ்கைப் வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
'விண்டோஸ் லைவ் மெசென்ஜர்' சேவைக்கு மாற்றாக வந்த இந்த ஸ்கைப், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 2023 பிப்ரவரி மாதம் மட்டும் தினசரி சுமார் 30.6 கோடி பயனர்கள் இதைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதே இதன் வெற்றிக்குரிய சான்றாகும்.
ஆனாலும், காலத்தின் ஓட்டத்தில் தேவைகள் மாறுகின்றன. அதனுடனே தங்கள் சேவையையும் மைக்ரோசாப்ட் புதுப்பித்து வருகின்றது. தற்போது, மைக்ரோசாப்ட் டீம்ஸ் தளத்தில் கவனம் செலுத்தும் நோக்கத்துடனும் பயனாளர்களுக்கு இன்னும் எளிமையான ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கும் நோக்கத்துடனும் ஸ்கைப் சேவையை நிறுத்த அந்த நிறுவனம் முடிவை எடுத்துள்ளது.
இந்த செய்தி ஸ்கைப் பயனாளர்களிடையே நெஞ்சை புடைக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம் தொழில்நுட்ப முன்னேற்றம் எனினும், மறுபக்கம் நினைவுகளை தாங்கிய ஒரு யுகம் முடிவுக்கு வருவதாகவே பலரும் கவலை தெரிவித்து வருகிறார்கள்.